இரங்கற்பா
- gdkarti
- Dec 5, 2016
- 2 min read

இரங்கற்பா!!!
இதைக் காலக் கொடுமையேயன்றி வேறென்ன நான் சொல்ல ? இறப்பு ஒரு நிகழ்வு தான் இயற்கையின் சூழற்சி தான் என பாடங்கள் படித்த என்னால் ஏன் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள இயலவில்லை ? கண்ணீர் மல்க மங்கையர் மாரடித்துக் கதறும் சத்தம் விண்ணைத்தான் எட்டுகிறது. ஏன் இவர்கள் நடுச்சாமமென்று கூட பாராமல் நடுரோட்டில் நின்று அழவேண்டும் ?? எனக்கொன்றும் விளங்கவில்லை. விளக்கிக்கூற இப்போது தாயும் கூட இங்கில்லை!!!
வாழ்க்கையில் வெற்றி தோல்வி புகழ் அவமானம் என எதையும் கையாள கற்றுத்தந்த நீங்கள் உங்கள் பிரிவை மட்டும் ஏன் தாங்கிக் கொள்ள கற்றுத்தர மறந்தீர்கள் ? எனக்குப் பின்னால் என்றதொரு வாக்கியத்தை ஏன் எங்களுக்கு நீங்கள் பழக்கவில்லை ?
சில சமயங்களில் குழந்தையின் சேஷ்டை அதிகரித்தால் எப்படி ஒரு தாய் அக்குழந்தையை சிறிது நேரம் விட்டுவிட்டு அது கதறி அழுது ஓய்ந்த பின் மீண்டும் வந்து கவனிப்பாளோ அது போல நாமும் ஒரு முறை செய்து பார்ப்போம் என எண்ணிணீர்களோ ?? வேண்டாமம்மா இந்த விவரீத விளையாட்டு!!!
ஒரு தாய்க்குத் தான் தன் குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும்; அதை எப்படி செய்ய வேண்டும்; அதை எப்போது செய்ய வேண்டும் என நன்றாகத் தெரியும் என்று கூறினீர்களே. ஏன் உங்கள் குழந்தைகளை இப்போது விட்டுச் சென்றீர்கள் ? உங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்டதென்றா ?? இல்லையம்மா. இன்னும் நாங்கள் தாயின் விரல் பிடித்தே நடக்கக் கற்கும் பச்சிளம் பிள்ளைகள் தான். உங்கள் மறைவால் நாங்கள் தட்டுத் தடுமாறி கீழே விழத்தான் போகிறோம். தாங்கிப் பிடிக்கத்தான் ஆளில்லை.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தெளிந்த நல்லறிவு, இறைபக்தி, விரைந்து முடிவெடுக்கும் திறன், தலைமைப் பண்பு, எடுக்கும் முடிவில் தீர்க்கம், தொலை நோக்குச் சிந்தனை, ஆளுமை, பல மொழிப் புலமை, மக்கள் அபிமானம், அரசியல் கூர்மை, எதிரிகளை நடுங்க வைக்கும் ஸ்திரமான குரல், அழகு, துணிச்சல் அப்பப்பா. இத்தனை குணாதிசியங்களைக் கொண்டு ஒரு பெண் ஆண் ஆதிக்க சமூகத்தில் வாழ்ந்தார், அதில் வென்றார் என்றால் அதைவிட பெரிய சாதனை வேறென்ன இருக்க முடியும் ?
உங்கள் வாழ்வில் எதையெல்லாமோ வென்றீர்கள். ஆனால் அதற்கெல்லாம் தலையாக உங்கள் மரணத்தால் இன்று இயற்கையை வென்றிருக்கிறீர்கள். உங்கள் உயிரை கவர்ந்தால் உங்களை வென்று விடலாம் என எண்ணிய இயற்கை உங்கள் புகழ் மக்கள் மனதில் அச்சாணி கொண்டு எழுதப்பட்டு இருப்பதை பார்த்து தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது. தன் கணக்கு பொய்த்துவிட்டது என்பதறிந்து இயற்கை உங்கள் பூத உடல் முன் கூனிக்குறுகி நிற்கிறது.
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று கூறினீர்கள் அதன் உண்மைத் தன்மை இன்று உங்கள் உடல் முன் கூடி நிற்கின்ற லட்சோப லட்ச மக்கள் மூலம் வெளிப்படுகிறது. காவிரி தந்த தாயே கலைச் செல்வியே ஒரு பெண்ணாக இனி வெல்ல இப்பூவுவகில் உங்களுக்கு ஏதுமில்லை. உழைத்தது போதும். நிம்மதியாக ஓய்வெடுங்கள்.
நிம்மதியாக துயில் கொள் கலை மகளே!!! நிம்மதியாக துயில் கொள்!!!
At this juncture I have only one request to the party men/women. Throughout her tenure as CM she had strived a lot to maintain peace in the state. Now in her death let's send her off with the same calmness what she wanted in the state without disturbing the public and the public assets.
#RestInPeace my Chief Minister.
Comentários